கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பில்லூர் அணையில் இன்று மதியம் 3 மணி நிலவரப்படி16,140 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தநிலையில் பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இன்று அணை முழுவதும் நிரம்பியது. எனவே அணையின் பாதுகாப்பை கருதி அதன் நான்கு மதகுகள் வழியாக 16,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களான தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது என்று வருவாய்த்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.