கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27 வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
அப்போது, கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதி உள்பட தமிழகத்தில் சில இடங்களில் வனப்பகுதிகளுக்கு அருகே ரிசார்ட் எனும் சொகுசு விடுதிகள் அமைவது அதிகமாகியுள்ளது. இவை உரிமம் பெற்றவையா? உரிய ஆய்வுக்கு பின்னர் தான் தடையின்மை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளனவா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், வனப்பகுதிகள் அருகே இயங்கும் ரிசார்ட்டுகள் அனைத்தும் உரிமம் பெற்றவை தான். அங்கு சரியான ஆய்வு செய்துதான் தடையின்மை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலர் காலம் காலமாக வனப்பகுதி அருகே ரிசார்ட் நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் பெற்றுள்ள உரிமம் தொடர்பான சந்தேகம் இருந்தால் அதை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மிக குறைவான தருணங்களில் அரசுக்கு தெரியாமல் எங்காவது ஒரு ரிசார்ட் உரிய அனுமதி இல்லாமல் துவங்கப்பட்டிருக்கலாம். அப்படி ஏதேனும் தகவல் இருந்தால், அதை வழங்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியர் மூலம் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உலக புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவிலேயே கோவையில் தான் அதிகம் மனித - யானை மோதல் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதை தடுக்க தாற்காலிக தீர்வுகள் என்பதை தாண்டி நிரந்தர தீர்வு உண்டா? என கேள்வி அமைச்சர் முன்பு வைக்கப்பட்டது.
அதற்கு அவர், கோவை மட்டும்மல்ல மனித-வனவிலங்கு மோதல் என்பது அனைத்து இடங்களிலும் உள்ளது. தமிழக அரசு இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் கருத்துரு பெற்று அந்தந்த மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்கு தற்போது பல்வேறு நவீன கருவிகள் வந்திருப்பதை குறிப்பிட்ட அமைச்சர் இவற்றை கோவை வனப்பகுதியில் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனும் தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் இதன் மூலம் வனத்துறை எந்த அளவிற்கு யானைகள் பாதுகாப்பு குறித்து செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
தமிழகத்தில் அழிந்து வரும் அரியவகை தாவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் ரூ.10 கோடி மதிப்பில் விதை பெட்டகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
யானைகள் வழித்தடம் (ELEPHANT CORRIDOR) குறித்து வெளிவந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்துக்கு பின்னர் அறிக்கை இறுதியவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா? என கேள்வி அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், அந்த அறிக்கை இறுதியவதில் தடங்கல் எதுவும் இல்லை. அது தயாராகி வருகிறது. தமிழகத்தில் எங்கெல்லாம் யானை வழித்தடங்கள் உள்ளது என்பதை கண்டறியும் பணியில் வனத்துறை தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
அந்த வழித்தடம் அருகே மக்கள் குடியிருப்பு, நிறுவனங்கள் குறித்து சரியான ஆய்வு நடைபெற்றுவருகிறது. முன்னர் இருந்த யானை வழித்தடத்தில் குடியிருப்புகள் வந்ததால் அந்த பாதையை விட்டு யானைகள் வேறு திசையில் செல்லக்கூடும். அவ்வாறு நடைபெற்றுள்ளதா என அனைத்தையும் ஆய்வு செய்துவருகிறது வனத்துறை. இந்த சிறப்பான ஆய்வு வனத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இது குறித்த இறுதி அறிக்கை விரைவில் வெளிவரும் என அவர் கூறினார்.
தமிழகத்தின் வனப்பகுதிகள் அருகே உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அதற்கு உரிய தொகையை அரசு வழங்கி, அங்குள்ள மக்களுக்கு எந்த சிக்கலும் இல்லாதவகையில் அதை வனமாக மற்றும் பணிகள் சில இடங்களில் நடந்துள்ளன எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் யானை வழித்தடங்கள் பற்றி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் 21.5.2024 அன்று கூறிய முக்கிய கருத்து :-