கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில ஆய்வு பணிகள் துவங்குகிறது!
- by David
- Mar 05,2025
கோவை மாநகரில் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான, நில ஆய்வுப் பணிகள் இன்று முதல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படும் முதல் இரண்டு தடங்களான கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலையில் நடைபெறும். இந்த 2 மெட்ரோ தடங்களின் துவக்க முதல் இறுதி வரை உள்ள சாலை பாதையை அடையாளப்படுத்துதல் உடன் எங்கெல்லாம் நிலத்தடியில் குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை கட்டமைப்புகள், உயர் அழுத்த மின்சார வயர்கள், தொலைபேசி உள்ளிட்ட வயர்கள் போன்றவை உள்ளது என அடையாளம் காட்டுவதுடன், அவற்றை மெட்ரோ திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அருகே வேறு எங்கு மாற்றி அமைக்க முடியும் என்பது பற்றி கண்டறியும் பணிகளும் ஆய்வில் அடங்கும்.
இந்த ஆய்வுப் பணிகளை செய்வதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இருந்து கோவை மாநகராட்சிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வுப் பணிகளை நடத்த இரண்டு நிறுவனங்களை சோதனை அடிப்படையில் நியமித்துள்ளது கோவை மாநகராட்சி.
முதல் கட்டமாக இந்த இரண்டு நிறுவனங்களும் 100 மீட்டர் நீளமுள்ள பகுதிகளை ஆய்வு செய்து அவர்களுடைய அறிக்கைகளை வழங்குவார்கள். அவர்கள் அறிக்கையின் துல்லிய தன்மையை ஒப்பிட்டு அதில் ஒரு நிறுவனம் இந்த ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்ள இறுதி செய்யப்படும்.
இந்த நில ஆய்வு பணிகள் எத்தனை நாட்களுக்குள் முடிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.