இன்று தமிழக சட்டப்பேரவையில், 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் M.ஜெயபால் கருத்து தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறைக்கு ரூ.21,178 கோடி , கோவை சூலூர் பல்லடம் பகுதிகளில் செமிகன்டெக்டர் தொழில் பூங்கா, 10 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் திட்டம், தொழிலாளர்களுக்கு குழு  காப்புரிமை திட்டம், ஒரு லட்சம் மகளீர்  தொழில் முனைவோர்களை  ஊக்குவிக்க தலா ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் திட்டம், ரூ.2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கனிணி திட்டம் போன்ற திட்டங்களை வரவேற்கிறோம் என்றார்.

கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கான அறிவிப்புகளான மூன்று ஆண்டுகள் பழமையான விசைத்தறிகளை ஷட்டில் லெஸ் தறிகளாக மாற்றுவதற்கு மூலதன மானியமாக ரூ.30 கோடி, விசைத்தறி கிளஸ்டர்களில் ஏற்றுமதி பொருட்களுக்கான தறி கொட்டகைகள், சிஎஃப்சி மற்றும் சோதனை கூடம் ஆகியவற்றை நிறுவ ரூ.20 கோடி, முழு தானியங்கி கணினி உதவி மையங்களை நிறுவ அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடி, தமிழ்நாடு டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மிஷன் திட்டத்துக்கு ரூ.15 கோடி, இலவச வேட்டி மற்றும் சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி,  கைத்தறி மற்றும் ஜவுளிக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,980 கோடி என்ற  திட்டங்களை வரவேற்கின்றோம் என கூறினார். இந்த அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

அப்போது எதனால் வருத்தம்?

தமிழக தொழில் முனைவோர்ளின் நீண்ட கால கோரிக்கைகளான தமிழகத்தில் LTCT மின்கட்டணம் போட்டி மாநிலங்களை விட அதிகம் உள்ளதை குறைக்க கோரினோம். இது பற்றி அறிவிப்பு இல்லை.

கூரையின் மீது அமைக்கப்பட்ட சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய கோரினோம். இதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழக நூற்பாலைகளுக்கு வருடம் 110 லட்சம் பேல்கள் தேவை. தமிழகத்தில் 3 லட்சம் பேல்கள் கூட விளைச்சல் இல்லை. பருத்தி விளைச்சல் அதிகரிக்க ஊக்கமளிக்கும் நிதி உதவி அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே உள்ள நலிவடைந்த  குறு சிறு நிறுவனங்கள் மேம்பட சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வரவில்லை. இவை ஏமாற்றத்தை அளிக்கின்றது. இவை குறித்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் என அவர் கூறினார்.